மத்திய கிழக்கு யுத்தம் முடிந்து சமாதானம் நிலவட்டும் – ரவூப் ஹக்கீம் பெருநாள் வாழ்த்து.!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவ வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ரமழான் மாதம் ஆன்மீகப் புத்தெழுச்சியும் தியாக மனப்பான்மையும் வளர்க்கும் புனித காலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
உலகின் பல பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக முஸ்லிம் மக்கள் துயரத்துடன் இந்தப் பெருநாளை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், காசா மற்றும் பலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட அவர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமைதி கிடைக்க வேண்டும்எனப் பிரார்த்தனை செய்தார்.
யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்து நீதி மற்றும் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இந்தப் பெருநாள் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தருணமாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.