எரிபொருள் நெருக்கடி: அரசின் திட்டமின்மையே காரணம் – ரவிகரன் குற்றச்சாட்டு.!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, அரசாங்கம் கேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தவறியதாலும் அதனால் ஏற்பட்ட எரிபொருள் பதுக்கல்களுமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் புதன்கிழமை அரச விடுமுறை அறிவிக்கப்பட்டமை குறித்தும் விமர்சித்தார்.
உலகளாவிய நெருக்கடி நிலைமைகளுக்கு அரசாங்கம் திடமான கொள்கை முடிவுகளை எடுக்காமல், நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும், நீண்டகாலத் திட்டமிடல் இல்லாத காரணத்தால், அரசாங்கம் தற்காலிக நடவடிக்கைகளிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் வரிசைகள்மற்றும் பதுக்கல்கள் கடந்த மாத இறுதியிலேயே தொடங்கியதாகவும், அதற்குப் பின்னரே QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தபடி, ஒன்றரை மாதத்திற்கு போதுமான எரிபொருள் வெறும் 10 நாட்களிலேயே முடிந்துவிட்டதாக கூறிய அவர், இந்நிலைக்கு அரசாங்கத்தின் செயலிழப்பு முக்கிய காரணம் எனவும் வலியுறுத்தினார்.