அரச வைத்தியர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து அவதானம்.!
அரச வைத்தியர்கள் இடமாற்றம் பெறும் போது அவர்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதில் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மற்றும் மருத்துவ விசேட நிபுணர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்துகொண்ட நிலையில், வைத்தியர்களின் இடமாற்றங்களின் போது அவர்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாத வகையில் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
வைத்தியர் இடமாற்ற நடைமுறைகளின் கீழ், பிள்ளைகளை புதிய பாடசாலைகளில் சேர்ப்பதில் உள்ள தடைகள் குறித்து விசேட நிபுணர்கள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். இதனையடுத்து, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும், தற்போதைய அனுமதி நடைமுறைகளை மீளாய்வு செய்து, இரு அமைச்சுகளும் இணைந்து நடைமுறைசார்ந்த மற்றும் திறமையான புதிய அமைப்பை உருவாக்கவும் இணக்கம் காணப்பட்டது.
அரச வைத்தியர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதி சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் சுகாதார அமைச்சு ஏற்கனவே விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், இடமாற்றங்கள் காரணமாக ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் தடைகளை குறைப்பதே அதன் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.