எரிபொருள் விலை மீண்டும் உயரும்.!
எரிபொருள் விலை குறித்து விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை மற்றும் இலங்கையில் அதன் தாக்கம் குறித்து ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எரிபொருள் இறக்குமதியில் தனியார் துறையினரின் பங்களிப்பு மற்றும் எதிர்கால விலை மாற்றங்கள் குறித்து அவர் பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
தனியார் துறையின் நெருக்கடியும் விநியோகமும்
இலங்கையின் எரிபொருள் தேவையில் 57 சதவீதத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 43 சதவீதத்தை தனியார் துறையும் பூர்த்தி செய்கின்றன. உலகச் சந்தையில் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்ய அனுமதி வழங்காவிட்டால், நட்டமடைந்து எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“ஒரு கப்பல் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 55 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுகின்றது. இவ்வளவு பெரிய நட்டத்தில் அவர்களால் தொடர்ந்து விநியோகத்தை முன்னெடுக்க முடியாது. எனவே, எரிபொருள் விலை குறித்து விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.” – என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் கப்பல்களின் வருகை
மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து விளக்கிய ஜனாதிபதி,
புஜைரா துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக இலங்கைக்கு வரவிருந்த 90 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பல் வராது என்று தெரிவித்தார். இதனை நிவர்த்தி செய்ய மார்ச் 5ஆம் திகதி கோரப்பட்ட டெண்டர் அடிப்படையில் புதிய கப்பல்கள் ஏப்ரல் மாதத்தில் நாட்டை வந்தடையவுள்ளன.
- ஏப்ரல் 6 – 7: டீசல் கப்பல்
- ஏப்ரல் 10 – 11: விமானங்களுக்கான ‘ஜெட் ஏ-1’ எரிபொருள் கப்பல்
- ஏப்ரல் 12 – 13: மசகு எண்ணெய் கப்பல்
- ஏப்ரல் 16 – 17: பெற்றோல் கப்பல்
விலை சூத்திரமும் உலகளாவிய தாக்கமும்
உலக சந்தையில் எரிபொருள் விலை ஒரு டொலரால் அதிகரித்தால், இலங்கையில் அதன் விலை 2 ரூபாவால் அதிகரிக்கும் என்பதே தற்போதைய விலை சூத்திரமாகும்.
“எமது நாட்டின் ரூபாயின் வீழ்ச்சி இதற்கு காரணமல்ல, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய நாடுகள் 50 சதவீதம் வரை விலையை அதிகரித்துள்ள போதிலும், நாம் இதுவரை 8 சதவீதமே அதிகரித்துள்ளோம்” – என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வரி வருமானம்
எரிபொருள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் குறித்தும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். கடந்த ஆண்டு டீசல் மீதான வரியூடாக மட்டும் 240 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது என்றும், மாதாந்தம் எரிபொருள் மூலம் சராசரியாக 20 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.