உலகப் போரை காரணம் காட்டி தப்பிக்கும் அரசு என சரத் வீரசேகர விமர்சனம்.!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிலவிய எரிபொருள் நெருக்கடிக்கு, நாட்டு மக்களின் உயிரைக் காக்க கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி செலவிடப்பட்டதே காரணம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அன்று நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களே வெளிநாட்டுத் தொழிலாளர்களை டொலர்களை அனுப்ப வேண்டாம் எனத் தூண்டிவிட்டு, திட்டமிட்டு அரசை நெருக்கடிக்குத் தள்ளினார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“அன்று எரிபொருள் வரிசைகளைக் காட்டி ராஜபக்ஷக்களைத் திருடர்கள் என விமர்சித்தவர்கள், இன்று உலகப் போரைச் சாட்டித் தப்பித்துக்கொள்ள முயல்கின்றனர். முறையான வெளியுறவுக் கொள்கை இருந்திருந்தால் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் உதவியுடன் அன்றே எரிபொருள் நெருக்கடியைத் தீர்த்திருக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய அரசு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதால், மின்சார உற்பத்திக்காகப் பாரியளவில் டீசல் வீணடிக்கப்படுகின்றது என்றும், இது நிர்வாகத் தோல்வியே தவிர யுத்தத்தின் விளைவல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.