சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது.!
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் எரிபொருளை சேமித்து வைத்திருந்த 70 வயதுடைய வர்த்தகர் ஒருவர் பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதிரிகிரிய – மீகஸ்வெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று புதன்கிழமை (18) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த சில நாட்களாகப் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சிறுகச் சிறுக இந்த எரிபொருள் தொகையைச் சேகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களில், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே இவ்வாறு பதுக்கி வைத்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் அப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வரும் 70 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (19) ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மீகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.