துப்பாக்கிகள் மற்றும் பெருமளவான தோட்டாக்களுடன் இளைஞன் கைது.!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பி.குணவர்தன மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பெருமளவான தோட்டாக்களுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று புதன்கிழமை (18) மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி, 9 மில்லிமீட்டர் ரக தோட்டாவைப் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ரி-56 ரக தோட்டா, 30 ரி-56 ரகத் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.