கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் தற்காலிகமாக ரத்து.!
கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனங்களை நிறுத்துவதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக ரத்து செய்ய கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.இந்த அறிவிப்பை மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் இன்று வெளியிட்டார்.
உலகளாவிய யுத்தச் சூழலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வரின் ஆலோசனையின் பேரில், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், நிதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மாநகர சபை நிர்வகிக்கும் வாகன நிறுத்த இடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய தீர்மானத்தின்படி மறு அறிவிப்பு வெளியாகும் வரை அனைத்து வாகன நிறுத்த இடங்களிலும் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமை சீராகி, பொருளாதாரம் வழமைக்கு திரும்பிய பின்னர் இதுகுறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.