கெளதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ – முதல் தோற்றப் படம் மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீடு.!
நடிகர் கெளதம் ராம் கார்த்திக் நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்றப் படம் மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.‘டாடா’ திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இந்தப் படத்திற்கு தற்போது ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜுமுருகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தீனா ராகவன் இயக்கியுள்ளார். இதன் ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா மேற்கொண்டுள்ளதுடன், இசையை சாம் சி. எஸ் அமைத்துள்ளார்.இத்திரைப்படத்தில் அஞ்சனா நேத்ருன், செல்வராகவன், ரோபி, பி.வாசு, வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலர் கெளதம் ராம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளனர்.
வெளியாகியுள்ள முன்னோட்டக் காட்சியின் அடிப்படையில், வலுவான அரசியல் பின்னணியைக் கொண்ட திரைப்படமாக இது உருவாகி வருவது தெரிகிறது. குறிப்பாக, ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து இடம்பெறும் உரையாடல்கள் முக்கியமாக கவனம் ஈர்க்கின்றன.இத்திரைப்படத்தின் வசனங்களை இயக்குநர் ராஜுமுருகன் எழுதியுள்ளார்.