முல்லைத்தீவில் நெல் கொள்வனவு தொடர்பான சிக்கல்கள் – இராணுவம் மீது ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு.!
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் தமது நெல்லை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டம், நீராவிப்பிட்டி பகுதியில் உள்ள நெற்களஞ்சியசாலையில் 24.02.2026 அன்று மாலை, இராணுவத்தினர் நுழைந்து 70-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை சந்தைப்படுத்தியதாக விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய வரிசையில் காத்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளிடமிருந்து தற்போது 14 வீதம் அல்லது அதற்கு குறைந்த ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டும் கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் மீதமுள்ள நெல்லை குறைந்த விலையில் தனியார் கொள்வனவாளர்களுக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் பொதுமக்களின் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்டு நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்வது விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கும் ரவிகரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாதுகாப்புப் படைகள் குறைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக உரிய தரப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.