நயினாதீவு விகாரை தொடர்பாக தேரரின் கருத்து – சமூக வலைத்தளங்களில் விவாதம்.!
கலகம குசலதம்ம தேரர் அவர்கள், நயினாதீவு நாகதீப விகாரை விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளார்.இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், குறித்த விகாராதிபதிக்கு யாழ்ப்பாணம் மக்களால் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கப்படாதது தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த நாக விகாரையின் விகாராதிபதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், ஆனால் நயினாதீவு விகாரையின் விகாராதிபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இன்றைய நிலவரத்தில் சில தரப்புகள் திஸ்ஸ விகாரை தங்களுக்கு உரியது எனக் கூறுவதாகவும், விகாரைக்கு ஒரு ஏக்கர் காணி மட்டுமே உரியது என தெரிவிக்கப்பட்டாலும், சுமார் 14 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு உரியது என கூறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளும்போது பெரும் சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.