இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் நாளை அடையாளப் பணிப்புறக்கணிப்பு.!
இலங்கை மின்சார சபையின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நாளை வியாழக்கிழமை அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.நாளை நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை ஆறு மணித்தியாலங்கள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட உள்ளது.
தமது நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாததை கண்டித்தும், அவற்றுக்கு உடனடி தீர்வு கோரியும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த ஆறு மணிநேர பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளாந்த பராமரிப்பு பணிகள், மின்வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயற்பாடுகள் மற்றும் அவசர திருத்தப்பணிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மின்விநியோகம் தடைப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது குறித்து தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கோரிக்கைகளுக்கு திருப்திகரமான தீர்வு வழங்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்