குறும்படங்களுக்கும் ஆதரவு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவிப்பு.!
மணிமேகலை, ராம்ஜி, நாடக நடிகர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லிட்டில் விங்ஸ்’ என்ற குறும்படத்தை நவீன் இயக்கியுள்ளார். மருது ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படம் தேசிய விருது பெற்றதுடன், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இதற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் ராஜு முருகன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.நிகழ்வில் உரையாற்றிய தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இந்தக் குறும்படத்தின் கதை சாதாரணமாகத் தோன்றினாலும், அதன் பின்னால் உள்ள ஆழமான கருத்துகள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவூட்டுவதாக தெரிவித்தார்.
திரைத்துறையில் திறமையான புதியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் இந்தக் குறும்படத்தை வழங்குவதாகவும் அவர் கூறினார். வருவாய் நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தளமாக இதை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தனித்துவமான இசை ஆல்பங்களுக்கு ஆதரவளித்து வந்த தமது நிறுவனம், தற்போது குறும்படங்களுக்கும் ஆதரவு வழங்கத் தொடங்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் பல புதிய திறமையாளர்களின் படைப்புகள் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.