திருகோணமலை மீனவர்கள் பிரச்சனைகள்: சட்டவிரோத மீன்பிடி கட்டுப்பாட்டுக்கு கடும் நடவடிக்கை.!
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரச் சிக்கல்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன பங்கேற்புடன் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வரவேற்புரை நிகழ்த்தினார்.
லைக்கோஸ் வலைகள் மற்றும் டைனமைட் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித காரணத்திற்கும் இதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் பிரதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கரைவலை மீன்பிடியில் டிராக்டர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டதுடன், மீனவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கல் மற்றும் பொருளாதார சவால்களை சமாளிக்க நிவாரணத் திட்டங்கள் அமல்படுத்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.எதிர்கால சந்ததியினருக்காக கடல் வளங்களையும் நீர்த் தரத்தையும் பாதுகாப்பதே அமைச்சின் முதன்மை நோக்கம் என வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் என். சிவலிங்கம், கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சின் செயலாளர் ஏ. எல். எம். அஸ்மி, மாவட்ட மேலதிக செயலாளர் எஸ். சுதாகரன், தேசிய நீரியல் மற்றும் கடல்வள ஆய்வு நிறுவனம் (NARA) விஞ்ஞானி பிரதீப் குமார், இலங்கை துறைமுக மீனவ கூட்டுத்தாபனம் தலைவர் பி. ஏ. பி. கபில பமுனு ஆராச்சி, தேசிய கடற்றொழிலாளர் சம்மேளனம் செயலாளர் எல். ஜி. அஜந்த குமார், மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், திருகோணமலை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.