டெங்கு பாதிப்பு காரணமாக 22 வயது இளம் பெண் திடீர் மரணம்.!
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வைத்தியர்களின் கவனக்குறைவே இந்த மரணத்திற்குக் காரணம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18ஆம் திகதி இவர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நான்கு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகுந்த கவலைக்கிடமாகியது.
இதனையடுத்து கடந்த 22ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.எனினும், அங்கு அனுமதிக்கப்பட்டு சுமார் 20 நிமிடங்களிலேயே அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
“மகள் நான்கு நாட்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறியவில்லை. அவர்களின் கவனக்குறைவும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காததுமே எனது மகளை எங்களிடமிருந்து பறித்துவிட்டது,” என செனுரியின் பெற்றோரும் கணவரும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
விசாரணையில், அவர் டெங்குநோயால் பாதிக்கப்பட்டிருந்ததே உயிரிழப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. தகுந்த பரிசோதனைகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பதே உறவினர்களின் கருத்தாக உள்ளது.உயிரிழந்த செனுரியின் இறுதிக்கிரியைகள் நாளை மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.