காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும், குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் எனவும், உணவு விற்பனை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சடலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டு யானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.