அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம்! – ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் அழைப்பு
அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்துச் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்துப் பிரம்மாண்டமான போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் அதன் செயற்குழு உறுப்பினருமான பிரியந்த பத்பேரிய அறிவித்துள்ளார்.
மக்களின் பெருவாரி நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, தனக்குக் கிடைத்த மக்களாணையைச் சரியாகப் பயன்படுத்தாது அதிகாரத்தைப் பலவந்தமாகத் தக்கவைத்துக்கொள்வதற்கே முற்படுகின்றது என்றும் அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கைவிட்டு, தற்போது புதிய அடக்குமுறைச் சட்டங்களை அரசு கொண்டுவர முயற்சிக்கின்றது. கடந்த காலத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய ஹரிணி அமரசூரிய, விஜித ஹேரத் மற்றும் வசந்த சமரசிங்க போன்றவர்கள் இன்று அதிகாரத்துக்கு வந்தவுடன் மீண்டும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் துடிப்பது ஏன்?
ஜனநாயகத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கிப் பொலிஸ் இராஜ்ஜியத்தை உருவாக்க முயல்கின்றனர். ஹோமாகம கொலை மற்றும் கடுவெல துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் பொலிஸாரின் தன்னிச்சையான போக்கையே தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. உலக வங்கியின் தரவுகளின்படி வேலையின்மை 43 சதவீதமாகவும், வறுமை 63 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 8.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
‘அஸ்வெசும’ நிவாரணம் 14 இலட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டமை மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் 29 அத்தியாவசிய மருந்துகள் இல்லாமை போன்ற பாரதூரமான பிரச்சினைகளால் அரசின் உள்ளூராட்சி சபைத் தலைவர்களும் மேயர்களும் கூடத் தற்போது பதவி விலகி வருகின்றனர்.
நாட்டின் கல்வி முறைமையும் முற்றாகச் சீர்குலைந்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 500 ஆசிரியர்கள் வேலையின்றி இருக்கையில், தரமற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொண்டு ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு மீறப்பட்டுள்ளது. 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், பாடசாலைகளுக்கு வழங்கப்படும் உதவிகளைக் கூட நிராகரிக்கும் குறுகிய மனப்பான்மையுடனேயே அரசு செயற்படுகின்றது.
எனவே, அரசின் மக்கள் விரோத அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொழும்பில் அணிதிரண்டு ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.


