மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கான திடமான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சி, மாகாணசபை தேர்தல்கள் உடனடியாக பழைய முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மாகாண சபை தேர்தல் தொடர்பான தெரிவுக் குழுவுடன் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று(04.11.2026) நடைபெற்ற கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி. கட்சியின் முக்கியஸ்தர்களான, கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.ஐ. முருகன்(தோழர் ஸ்ராலின்) மற்றும் சட்ட விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சண். சஞ்சீவன் ஆகியோர் குறித்த விடயத்தினை வலியுறுத்தினர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“மாகாண சபை முறைமையை ஈ.பி.டி.பி. ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்தும் வரவேற்றும் வருகின்றது.
தற்போது, புதிய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமாயின், அதற்கான எல்லை மீள்நிர்ணயத்தினை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, அதற்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படும் என்பதுடன் தேவையற்ற குழப்பங்களையும் ஏற்படுத்தும்.
எனவே, இம்முறை மாகாண சபை தேர்தல்களை பழைய தேர்தல் முறையான விகிதாரசார தேர்தல் முறையில் நடத்துவதே பொருத்தமானது.
இதன்போது, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு போதிய ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.
அதேவேளை, முன்னாள் ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அது தற்போதைய ஜனாதிபதியினால் ஒப்பமிடப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்படுமாயின், அடுத்த கணமே அமுலுக்கு வந்துவிடும்.
இதேபோல காணி அதிகாரமும் சாத்தியமான ஒன்றாகவே காணப்படுகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


