பேரிடர்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பு.!
பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இரத்மலானை – கந்தவல வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்மாணங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஒக்டோபர் 30ஆம் திகதி கந்தவலையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இரத்மலானை – கந்தவல வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்மாணங்களை அபிவிருத்தி செய்வதற்கான இத்திட்டம், மேல் மாகாண சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மேல் மாகாண வீதி அமைச்சின் கண்காணிப்பில், மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்காக மேல் மாகாண அபிவிருத்தி நிதியத்திலிருந்து 1,104 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய பிரதமர், புதிய கந்தவல அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசியல் அதிகாரத்துக்கும் உரிய அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படும் சிறந்த ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை விசேடமாகப் பாராட்டினார். அத்துடன், கந்தவலப் பிரதேச மக்களும் அங்குள்ள அரச, தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் பொது நோக்கத்துக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்து இத்திட்டத்துக்கு வழங்கும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
அதேவேளை, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகத் தொடர்ச்சியாகத் தலையிட்டுச் செயற்பட்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்கவுக்கும், இதற்கான நிதித் தடைகள் எவையும் ஏற்படாதவாறு செயற்பட்ட மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களுக்கும் விசேடமாக நன்றி தெரிவித்த பிரதமர், இத்திட்டத்தை ஒரு வருடத்துக்குள் நிறைவுசெய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனவும், அதன் மூலம் பிரதேசவாசிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு நிவாரணம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“நகர அபிவிருத்தி எமது பிரதான பொறுப்பாகும். அதற்காகக் கொழும்பு மாவட்டத்திலும் நாம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி கொழும்பு பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்தோம். அதற்காக 2.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, 15,077 மில்லியன் ரூபாய் செலவிலான கொலன்னாவ மழைநீர் வடிகாலமைப்புத் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
கொலன்னாவ உள்ளிட்ட வெள்ள அபாயத்துக்கு உள்ளாகும் கொழும்புப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்குவதற்காக மேலும் ஒரு விரிவான திட்டத்தையும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால், இத்திட்டங்கள் அனைத்தும் கடனுதவிகளுடன் அல்லாமல் உள்நாட்டு நிதியிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படுவதாகும். அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவமும் உள்நாட்டு வருமானங்களின் அதிகரிப்பும் திறைசேரியைப் பலப்படுத்தியுள்ளன. அதனால், கடன் பெறாமலேயே நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான இயலுமை எமக்குக் கிடைத்திருக்கின்றது. மக்கள் சுமூகமான, பாதுகாப்பான, இலகுவான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அது அரசியல் தலைமைகளாகிய எமதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய கொழும்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க,
“இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக நானும் கந்தவலப் பிரதேசத்தின் நகர சபை உறுப்பினரும், தெஹிவளை – கல்கிசை மாநகர முதல்வரும், பிரதேசவாசிகளும், தொழிற்சாலை உரிமையாளர்களும், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
மழைநீர் தேங்கும் பிரச்சினையால் இப்பிரதேச மக்கள் உள்ளிட்ட அனைவரும் நீண்டகாலமாகப் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். எமது நோக்கம் இதற்குத் தற்காலிகத் தீர்வு காண்பதல்ல; சரியான திட்டமிடலின் அடிப்படையிலான உறுதியான, விஞ்ஞானபூர்வமான தீர்வை வழங்குவதேயாகும்.
இன்று 1,104 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் ஆரம்பிக்கப்படும் இத்திட்டம், இதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஒட்டுமொத்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டம் மட்டுமேயாகும். முழுமையான திட்டத்துக்காக 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியுடன் நின்றுவிடாமல், இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வை வழங்கி, இந்நகரை மிகவும் அழகானதாகவும் வாழ்வதற்குத் தகுதியான சூழலைக் கொண்டதாகவும் மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதற்காக உழைத்த அனைத்து அதிகாரிகளினதும் தரப்பினரினதும் பங்களிப்பை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இரத்மலானை சந்துங்கம விகாராதிபதி பிதுவல ரதனவம்ச தேரர், இரத்மலானை புண்ணியவர்த்தனாராமாதிபதி கொங்கமுவே மேதங்கர தேரர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயானந்த ஜயவீர, தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மேயர் கே. டீ. பராக்கிரம சாந்த உள்ளிட்ட உறுப்பினர்கள், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் இந்திக விக்கிரமசிங்க, இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கே. எம். ஜி. பிரசன்ன பிரேமதாச, மேல் மாகாணப் பிரதம செயலாளர் கே. ஜி. பிரதீப் புஷ்பகுமார, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட அழைக்கப்பட்ட அதிதிகளும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.





