கடற்றொழில் துறையின் செயல்திறனை மேம்படுத்த 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்.!
இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வள முகாமைத்துவத்தை மேலும் நிலையானதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில், கள உத்தியோகத்தர்களுக்காக 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (30) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டனர்.
344.87 மில்லியன் ரூபாய் மொத்த மதிப்பீட்டுச் செலவைக் கொண்ட இத்திட்டம் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கத்தினால் 264.59 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்பு வழங்கப்படுவதுடன், உள்நாட்டு நிதியிலிருந்து 80.28 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) ஆகிய நிறுவனங்களின் கள உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும்போது எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்களைத் தீர்ப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாகக் காணப்படும் சிரமமான பிரதேசங்களில் போக்குவரத்துத் தடைகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கள விஜயங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 980 கடற்றொழில் இறங்குதுறைகள் மற்றும் 23 கடற்றொழில் துறைமுகங்களில் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதே அமைச்சின் இலக்காகும்.
இத்திட்டத்தின் மூலம் 430 கள உத்தியோகத்தர்கள் நேரடிப் பயன்களைப் பெறுவதுடன், 3 இலட்சத்திற்கும் அதிகமான கடற்றொழில் சமூகத்தினர், 2,000 நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்கள் மற்றும் சுமார் 6 இலட்சம் நுகர்வோர் மறைமுகப் பயன்களைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவசர அனர்த்த நிலைமைகளின்போது விரைவாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுத்தப்படுவதுடன், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் போக்குவரத்து முறையை நோக்கி நகர்வதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும்.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இணங்க நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.




