அணுசக்தி சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஈரானின் அணுசக்தித் தலைவருக்குத் தடை!
வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமையகத்தில் நடைபெற்று வரும் 5 நாட்கள் கொண்ட ஆண்டுப் பொது மாநாட்டில் பங்கேற்கவிருந்த ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர் மொஹமட் எஸ்லாமிக்கு (Mohammad Eslami) விசா வழங்க ஒஸ்திரியா மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையிலிருந்து விலக்கு அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருந்த மொஹமட் எஸ்லாமி மற்றும் அவருடன் செல்லவிருந்த தூதுக்குழுவினர் தங்களது வியன்னா பயணத்தை ரத்து செய்துவிட்டு டெஹ்ரானுக்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, 2015 க்கு முந்திய பாதுகாப்பு சபையின் யணத் தடை சட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி திட்டங்களுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்குப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஸ்னாப்பேக்’ பொருளாதாரத் தடைகளின் கீழ் இத்தகைய அதிகாரிகளுக்கு உறுப்பு நாடுகள் அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் ஈரானிய தூதர் ரேசா நஜாபி எஸ்லாமிக்கு முதலில் விசா ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது உறுப்பு நாடான ஈரானின் உரிமைகளை நேரடியாகப் பறிக்கும் செயல் என்று கண்டித்தார்.
இதில் அமெரிக்காவின் அழுத்தம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மாநாட்டை நடத்தும் நாடு என்ற முறையில் ஒஸ்திரியா தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.