மஹிந்தவுக்காகவே நாங்கள் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.!
“சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்ஷவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப் போவதில்லை.” – என்று புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
“நாங்கள் மஹிந்த வேண்டாம் என்று கூறிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் செல்லவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்த அந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, மிகக் குறுகிய காலத்துக்குள் நாட்டை அந்தப் பேராபத்திலிருந்து வெற்றிகரமாகப் பாதுகாத்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எங்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சில கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டமை உண்மையே. அதற்காக இத்தகைய ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே நாம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.
தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் எழுந்துள்ள நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எந்தவித பேதமுமின்றி ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமையே எதிர்காலத்தில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாக அமையும்.” – என்றார்.