உயர்கல்வித் துறை பற்றிய உபக்குழு கூடியது
பல்கலைக்கழகப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை மிகவும் திறம்பட முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் ஆலோசனை
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், உயர்கல்வித் துறை பற்றிய உபக்குழு 2026.09.10 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. பல்கலைக்கழகங்களின் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை மற்றும் பகிடிவதையை ஒழித்தல் குறித்து இதன்போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாராப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆட்சேர்ப்பு முன்னேற்ற விபரம் அடங்கிய அறிக்கையொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.
அத்தோடு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தற்போது நிலவும் கல்வி மற்றும் கல்விசாராப் பணியாளர் ஆட்சேர்ப்புகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த பிரதமர், அதனை மிகவும் திறமையான வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தற்போது பணியாளர் ஆட்சேர்ப்புச் செயல்முறையில் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை, பகிடிவதை மற்றும் வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான கல்விச் சூழலொன்றை உருவாக்குவதற்கு அனைவருக்கும் ஒழுக்கநெறி சார்ந்த பொறுப்பொன்று உள்ளதை எடுத்துரைத்த பிரதமர், பகிடிவதை தொடர்பில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகளை எளிதாக எண்ணிப் புறக்கணிக்கக் கூடாது என்றும், பகிடிவதை சார்ந்த பிரச்சினைகளின்போது மாணவர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காகப் பல்கலைக்கழகங்களும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனெவிரத்ன உள்ளிட்டோரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.









