மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்தத் தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தக் கால நீடிப்பு மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடும் சதி என்று குற்றஞ்சாட்டினர்.
விசேட செயற்பாட்டுக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டதால் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது, மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்பாட்டு காலத்தை நிலையியல் கட்டளை 102 இன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையான 3 மாத காலத்துக்கு நீடிப்பதற்கான யோசனையை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
“இந்த விசேட செயற்குழுவின் உறுப்பினராக நான் பதவி வகிக்கின்றேன். இந்தக் குழு நியமிக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. குழுவின் செயற்பாடுகள் மந்தகரமாகவும் அதிருப்திக்குரியதாகவும் காணப்படுகின்றன.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தக் குழு முன்னெடுக்கவில்லை. மாறாக காலத்தை தொடர்ந்து இழுத்தடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன .தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தல் குறித்து பரிந்துரைகளையும் யோசனைகளையும் முன்வைத்துள்ளது.
நாங்கள் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். ஆனால் அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே செயற்குழுவின் காலத்தை நீடிக்கும் அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். இனி செயற்குழுவின் கூட்டத்தில் பங்குபற்றப் போவதில்லை.” – என்றார்.
இதன்போது எழுந்த ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ, “ஒருசில செயற்குழுக்களின் செயற்பாட்டுக் காலம் நீடிக்கப்படுவது வழமையானது. குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே காலம் நீடிக்கப்படுகின்றது. இதில் இந்தச் செயற்குழு ஒன்றும் விதிவிலக்கல்ல, மாகாண சபைத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு இல்லை. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். அதற்குரிய வசதிகளை நாடாளுமன்றத்தில் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” – என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “செயற்குழுவின் காலத்தை நீடித்து மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஜனநாயக விரோத செயற்பாடு. இந்த ஜனநாயக விரோதச் செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.” – என்றார்.
இதனையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடா ளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, “மாகாண சபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமையில் நடத்துவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விகிதாசார முறைமையின் கீழ் முரண்பாடற்ற வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம். ஆகவே குழுவின் காலத்தை நீடித்து தேர்தலைப் பிற்போட வேண்டாம்.” – என்றார்.
இதனையடுத்து எழுந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சாணக்கியன் இராசமாணிக்கம்,
“செயற்குழு கடந்த வியாழக்கிழமை கூடியது. அப்போது குழுவின் காலத்தை நீடிக்கும் தீர்மானம் பற்றிப் பேசவில்லை. பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பது பற்றியே பேசப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரதிநிதிகள் வியாழக்கிழமை குழுவில் முன்னிலையாகினார்கள். அவர்களிடம் இளைஞர் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்பட்டது. இளைஞர் பிரதிநிதித்துவத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை. குழுவின் காலத்தை நீடித்துத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது.” – என்றார்.
இதனையடுத்து மீண்டும் எழுந்த ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடும் தீர்மானத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கவில்லை. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்தக் குழு நியமிக்கப்பட்டது. குழுவின் அறிக்கைக்கு அமைவாகவே தேர்தலை நடத்த முடியும். மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் நாங்களும் உள்ளோம்.” – என்றார்.
இதன்போது மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “அரசின் இந்தத் தீர்மானம் முற்றிலும் தவறானது. மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் குழுவின் காலத்தை நீடிக்கும் தீர்மானம் மீது வாக்கெடுப்பை நடத்தலாம். அப்போது நாட்டு மக்கள் உண்மையை தெரிந்துகொள்வார்கள். வாக்கெடுப்புக்குத் தயாரா?” – என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ,
“நிலையியல் கட்டளை 102 இன் பிரகாரம் தீர்மானம் சபைக்கு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, இதற்கு வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக,
“தேர்தலுக்குத் தயார் என்று அரசு பேச்சளவில்தான் சொல்லுகின்றதே தவிர செயற்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாடாளுமன்றத்துக்குள்ளும் வாக்கெடுப்புக்குச் செல்ல முடியாத நிலையில்தான் அரசு உள்ளது.
செயற்குழுவின் காலத்தை நீடிக்கும் தீர்மானத்துக்கு எமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்கின்றோம். அதேபோல் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இனி செயற்குழு நடவடிக்கைகளில் பங்குபற்றப் போவதில்லை. அவர்கள் குழுவில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்கள் என்பதையும் பதிவு செய்யுங்கள்.” – என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடம் தெரிவித்தார்.