பிரதம நீதியரசருக்கு எதிரான அரசின் அழுத்தம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல்.!
பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு அரசிலுள்ள ‘டிஜிட்டல் பயங்கரவாதிகள்’ குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், தமக்கு ஏற்றாற்போல் தீர்ப்பளிக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனக் கூறி பிரதம நீதியரசருக்கு அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அரசின் முக்கிய தரப்பினருக்குத் தற்போதைய பிரதம நீதியரசரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவியில் நீடிக்கச் செய்யும் தேவை காணப்படுகின்றது.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவராகவும், உயர்நீதிமன்றத்தின் தலைவராகவும் பதவி வகிக்கும் பிரதம நீதியரசர் நாட்டின் ஜனநாயகத்துக்கு நேரடிச் செல்வாக்குச் செலுத்தும் ஒருவராவார். எனினும், தமக்கு ஏற்ற வகைத் தீர்ப்புகளை வழங்கவும், சட்டங்களை இயற்றவும் அரசின் தனிநபர் ஒருவர் மூலமாக அவருக்குக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அரசில் உள்ள டிஜிட்டல் பயங்கரவாதிகள் பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமக்குச் சாதகமான தீர்ப்புகள் வழங்கப்படாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்ற மிரட்டல் விடுக்கப்படுவதே இப்போதைய உண்மையாகும்.
இந்த நெருக்கடியான நிலையில் இருந்து பிரதம நீதியரசரை உடனடியாகப் பாதுகாக்காவிட்டால், நீதித்துறையின் முழுக் கட்டமைப்பையும் அரசு கைப்பற்றிவிடும். இது நாட்டின் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன், அரசின் இந்த முறையற்ற செயற்பாட்டைத் தோற்கடிக்காவிட்டால் முழு நாடும் அழிவைச் சந்திக்கும்.
ஜனாதிபதி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவே செயற்படுகின்றார். நீதிமன்றம் ஒரு விடயம் தொடர்பில் தீர்ப்பளிப்பதற்கு முன்பே, ஜனாதிபதி முன்கூட்டியே அரசியல் மேடைகளில் தீர்ப்புகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கின்றார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ், டிஜிட்டல் பயங்கரவாதம் மற்றும் 80ஆம் ஆண்டு காலப்பகுதியின் உண்மையான பயங்கரவாதக் கூறுகளைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றார். இத்தகைய முறையற்ற செயற்பாடுகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கன.” – என்றார்.