சிரியாவில் ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு: 14 பேர் பலி!
சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணம் சர்மடா நகருக்கு அருகில் உள்ள தற்காலிக ஆயுதக் கிடங்கொன்றில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இதில் சில பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர் என சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போர் எச்சங்கள் மற்றும் ஆயுதங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தத்தளத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியது.
தொடர்ந்து ஏற்பட்ட சிறிய வெடிப்புகள் காரணமாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரகாலக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், நீண்ட காலப் போரின் எச்சங்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் ஆயுதங்கள் சேமிக்கப்படுவதால் இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.