கமரூனில் துப்பாக்கி முனையில் 5 ஆசிரியர்கள் கடத்தல்!
கமரூனின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
வூம் (Wum) நகரில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் குறித்து அந்தப் பிராந்தியத்தின் ஆளுநர் அடோல்ப் லெலே லாஃப்ரிக் (Adolphe Lele Lafrique) உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய தாக்குதாரிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை பயிற்சி மையத்திற்குள் நுழைந்த ஆயுதக் குழுவினரைத் தடுத்திட முயன்ற காவல்துறை அதிகாரி மீது தாக்குதாரிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் காவல்துறை அதிகாரியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, அங்கிருந்த ஐந்து ஆசிரியர்களை ஆயுதக் கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது.
கெமரூனின் ஆங்கில மொழி பேசும் பிராந்தியங்களில் கல்வி ஆண்டை சீர்குலைக்கும் நோக்கில் பிரிவினைவாத குழுக்கள் முடக்கம் அறிவித்துள்ள சூழலில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
கெமரூனின் ஆங்கில மொழி பேசும் பகுதிகளில் அரச படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக மோதல்கள் நிலவி வரும் நிலையில், இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.