புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி கௌரவிப்பு
கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்தின் திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையைச் சேர்ந்த ரவிகரன் விஸ்வாதியா என்ற மாணவி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 173 புள்ளிகளைப் பெற்று திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவியாக தெரிவாகியுள்ளார்.
இம்மாணவியைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், பரிசு வழங்கும் நிகழ்வு திருக்கோவில் கல்வி வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பப்பிரிவு ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார், ஆரம்பப்பிரிவு மற்றும் கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்டத்தில் சிறப்பான பெறுபேற்றைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியாவுக்கு பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டதுடன், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் கௌரவித்தார்.
மாணவியின் இந்தச் சாதனை பாடசாலை மட்டத்திலும், ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திலும், திருக்கோவில் கல்வி வலயத்திலும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்










