பொகவந்தலாவையில் பெண் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை
பொகவந்தலாவை, தெரேசியா தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்த குறித்த பெண் தொழிலாளியை, புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரியளவிலான சிறுத்தையொன்று கழுத்து மற்றும் கைப் பகுதிகளில் தாக்கியுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலினால் குறித்த பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
காயமடைந்த பெண் தொழிலாளர் முதலில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களை தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அவற்றை இரையாக்கிக் கொள்வதற்காக சிறுத்தைகள் இப்பகுதிக்கு வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாய்களை வேட்டையாடும்போது ஏற்படும் தடைகள் காரணமாக, அருகில் உள்ள மனிதர்களை சிறுத்தைகள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

