ரூ.4.5 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் – ஒருவர் கைது
மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் சுமார் ரூ.4.5 கோடி பெறுமதியான ஆம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.
சாங்க்லி கிராமப்புற காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து காஸ்பே திக்ராஜ் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இந்தப் பறிமுதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரண்டு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த திமிங்கல எச்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோல்ஹாபூர் மாவட்டத்தின் குன்கி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய அமோல் சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் இந்த திமிங்கல எச்சம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சம் மும்பை மற்றும் புனே உள்ளிட்ட பெருநகரங்களின் சட்டவிரோத சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக சிந்துதுர்க் மாவட்டத்தின் குடால் பகுதியில் சுமார் ரூ.2.4 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி, இரண்டு நாட்களுக்குள் மேற்கு மகாராஷ்டிர பகுதியில் மாத்திரம் சுமார் ரூ.7 கோடி பெறுமதியான திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பெர்ம் திமிங்கலங்களின் செரிமான மண்டலத்தில் உருவாகும் மெழுகு போன்ற பொருளே ஆம்பர்கிரிஸ் எனப்படுகிறது. இது விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களில் நறுமணத்தை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், சில நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்திலும் இந்தப் பொருள் பயன்படுத்தப்படுவதால், சர்வதேச சந்தையில் இதற்கு அதிகளவான கேள்வி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.