மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!
மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க . கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் திரு. ஜகத் லியனாராச்சி அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது அதிகாரிகளின் கடமைகள், தகவல் கோரிக்கைகளை உரிய காலவரையறைக்குள் கையாளுதல், தகவல் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் தகவல் வழங்கும் செயற்பாட்டில் அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்களை சட்டத்திற்கு அமைவாக கையாளுதல் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், அரச நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், தகவல் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொது அதிகாரிகளின் பொறுப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, அரச நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கிய பங்காற்றுவதாகவும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.




