உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

சர்வதேச ஆதரவு தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விசேட விழிப்புணர்வு செயலமர்வு!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
52 பார்வைகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

இச் செயலமர்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ. அஸீஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி மற்றும் மனித உரிமைகள் அதிகாரி பிரியங்க விஜேநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு விசேட விரிவுரைகளை ஆற்றியிருந்தனர்.

தொடர்ந்து, சித்திரவதை தடுப்பு மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்து மனித உரிமைகள் அதிகாரி பி.எம்.எம். பெரோஸ் கருத்துரைகளை வழங்கினார்.


இங்கு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகை அல்லது தண்டனைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, 1997 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த உடன்படிக்கை ஆனது, உறுப்பு நாடுகள் சித்திரவதைகளை தடை செய்யவும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்கவும், பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்கவும் கோருகின்றது.

எந்தவொரு தரப்பும் எக்காரணம் கொண்டும் எவரையும் தண்டிக்க முடியாது. இதனை அரச நிர்வாகத்தினர் அல்லது நிறைவேற்றுத் துறையினர் மீறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர முடியும்” எனக் குறிப்பிட்டார்.

செயலமர்வில் உரையாற்றிய கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி தெரிவிக்கையில்,

“இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது தற்போது விசேட ‘தேசிய தடுப்புப் பொறிமுறை’ (National Preventive Mechanism) ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

இதன் கீழ் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், சிறுவர், பெண்கள் மற்றும் ஆண்கள் இல்லங்கள், வைத்தியசாலைகளின் உளநலப் பிரிவுகள் போன்ற இடங்களுக்கு ஆணைக்குழுவினர் திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதுடன், உரிய அதிகார மட்டங்களின் கவனத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

அத்துடன், அனர்த்தக் காலங்களிலும் அவசர நிலைமைகளிலும் மனித உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பு வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்ட உதவி ஆணைக்குழுவின் அதிகாரிகள், பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர்கள், இல்லங்களை நெறிப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீனவர்கள் சார்பில் முறைப்பாடு!

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித…

37 0 0
இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது

மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மறே வட்டாத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் உறுப்பினர் இரண்டு முன் மொழிவுகளை முன் வைத்து பேசினார். இன்று 16 ம் திகதி…

57 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் – 2026 எனும் நிகழ்வு அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக…

50 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் CResMPA திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய…

60 0 0