கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சின் CResMPA திட்டத்தின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் புதிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கிளிநொச்சி மாவட்டத்திற்கான புதிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், உள்ளக கணக்காய்வாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கட்டட நிர்மாணத்திற்காக 65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து பொதுப் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவுள்ள இக்கட்டிடம், இரண்டு மாடிகளைக் கொண்ட நவீன வசதிகளுடன் முழுமையான அனர்த்த முகாமைத்துவ சேவைகளை வழங்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, திருகோணமலை, கண்டி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன.
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கும், பேரிடர் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.