அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்.!
நாட்டில் நிலவும் எரிபொருள் சிக்கல்களை கண்டறிந்து தீர்வு காணும் நோக்கில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடும் குழுக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது.
ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் சிக்கல்களை கண்டறிந்து, கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து தீர்வுகளை வழங்குவது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
கைத்தொழில், போக்குவரத்து, சுற்றுலா, உணவுப் பொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் எரிபொருள் ஒதுக்கீடு போதாமை குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்படின் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.
மேலும், எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மூலம் வலுசக்தி அமைச்சுக்கு சமர்ப்பித்து விரைவான தீர்வுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான எரிபொருள் வழங்கலில் கையெழுத்து கடித முறைமையை மாற்றி கியூஆர் குறியீட்டு முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலைகள்அதிகரிக்காதவாறு எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.