சிலையை தாய் என நினைத்ததா? – மக்களை உருக்கிய இளம் காட்டு யானை.!
கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலைக்கு அருகில் இன்று (28) காலை, நெகிழ்ச்சியூட்டும் அதேவேளை அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இன்னமும் கட்டுமானப் பணியில் உள்ள இந்த யானை சிலைக்கு அருகில் வந்த, ஓரளவு வளர்ந்த இளம் காட்டு யானை ஒன்று, அந்த சிலையை விட்டு நகரமால் பல மணி நேரமாக அதனைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஓரளவு வளர்ந்த நிலையில் உள்ள இந்த இளம் யானையின் விசித்திரமான நடத்தையைக் கண்ட அப்பகுதி மக்களும், அவ்வழியாகச் சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
கூட்டத்திலிருந்தோ அல்லது தனது தாயிடமிருந்தோ பிரிந்து வழி தவறி வந்த இந்த யானைக்குட்டி, தூரத்தில் தெரிந்த இந்த யானை உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒன்று என்றோ நினைத்து இவ்வாறு அருகில் வந்து நிற்கிறதோ என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஓரளவு வளர்ந்த யானையாக இருப்பினும், நகரத்தை ஒட்டிய பகுதியில் இவ்வாறு தனியாக நடமாடுவது அதன் பாதுகாப்பிற்கும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த யானையைப் பாதுகாப்பாக அருகில் உள்ள காப்பகத்திற்கு அல்லது காட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மனித – யானை மோதல் தீவிரமடைந்துள்ள இக்காலகட்டத்தில், கூட்டத்திலிருந்து பிரிந்த வனவிலங்கு ஒன்று தஞ்சமடைந்து செயற்கையாகச் செய்யப்பட்ட ஒரு சிலைக்கு அருகில் வந்து நிற்கும் இந்தச் சம்பவம், அனைவரின் மனதையும் உருக்கும் ஒரு நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.