லீசிங் விவகாரம்: பெண்ணை அச்சுறுத்தியதாக பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில், லீசிங் தொகை செலுத்தாததை முன்னிட்டு, லீசிங் நிறுவனம் மற்றும் மருதங்கேணி பொலிஸாருடன் சென்ற உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க தம்மை அச்சுறுத்தி அவமதித்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரைவலை மீன்பிடித் தொழிலுக்காக உழவியந்திரம் ஒன்றை லீசிங் அடிப்படையில் பெற்றிருந்த குடும்பஸ்தர், குறிப்பிட்ட காலத்தில் தொகையை செலுத்தாததாக கூறி, லீசிங் நிறுவனத்தினர் நேற்று (27) பொலிஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க, பெண் என்பதைப் பொருட்படுத்தாமல் தம்மிடம் கேவலமாக நடந்து கொண்டதாகவும், உழவியந்திரத்தை ஒப்படைக்காவிட்டால் தம்மையும் குடும்பத்தினரையும் போதைப்பொருள் குற்றச்சாட்டில்கைது செய்து சிறையில் அடைப்பதாக மிரட்டியதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், குளித்து உடை மாற்றிக்கொள்ளவும் நேரமளிக்காமல் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இவ்வாறான மிரட்டல்களால் தமது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கே எனவும் குறிப்பிட்டுள்ளார்.