தோட்டப் பகுதிகளில் இலவச மருத்துவத் திட்டம்.!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தூரப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, மஸ்கெலியா நகருக்கு வர முடியாத நிலையில் இருந்தாலும், அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று இலவச ஆயுர்வேத மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியை மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, காட்மோர் தனியார் தோட்டத்தின் தம்பேத்தன பிரிவில் உள்ள மக்களுக்காக, நேற்று மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், வட்டார உறுப்பினர், ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் காட்மோர் தோட்டத்தின் ஏழு பிரிவுகள், மொக்கா தோட்டத்தின் நான்கு பிரிவுகள் மற்றும் டீசைட் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.இவ்வாறான மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
