“யுத்தம் முடிந்தாலே மோதல்கள் முடிவதில்லை” – நோர்வே நாடாளுமன்றத்தில் தாயகத்தின் நீதிக்காக கம்ஷாயினி குணரத்னம் குரல்.!
கம்ஷாயினி குணரத்னம் இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பாக நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்துள்ளார்.அவரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் இடம்பெற்ற இந்த விவாதத்தில், “ஒரு நாட்டில் யுத்தம் முடிவுக்கு வருவதை, அந்நாட்டில் நிலவும் மோதல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகக் கருத முடியாது” என அவர் குறிப்பிட்டார்.
1988 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தச் சூழலில் பிறந்ததாக தெரிவித்த அவர், விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் ஒலிக்கும் போதெல்லாம் தமது தாய் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்ததாக நினைவுகூர்ந்தார். பின்னர் தமது குடும்பம் பாதுகாப்பான வாழ்வை நாடி நோர்வேக்கு இடம்பெயர்ந்ததாகவும் கூறினார்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்தாலும், அதன் விளைவுகள் தொடர்ந்தும் உணரப்படுகின்றன என்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் கடந்தகால சம்பவங்களை நினைவூட்டுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து கவலை வெளியிட்டார்.
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தல்கள் சர்வதேச அளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், புதிய அரசின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடும் அரசியல் சீர்திருத்த வாக்குறுதிகளும் அதற்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், அவை நடைமுறையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், தமிழர் வாழும் பகுதிகளில் மத மற்றும் நில உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவுவதாக குறிப்பிட்டார்.வடக்கு மற்றும் கிழக்கில் புதிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவதும், சில நிலப்பகுதிகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும் கவலையளிப்பதாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.