இருபது கோடி ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் விடுதி ஊழியர் கைது.!
காலி மாவட்டம், அஹுங்கல்லை பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹுங்கல்லை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வதுகெதர, ஆந்தாதொல பகுதியில் சந்தேகநபர் வாடகைக்கு எடுத்திருந்த இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பெரும் போதைப்பொருள் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் 5 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் பலபிட்டிய, மகலதூவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய விடுதி ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் குறித்த இல்லத்தை வாடகைக்கு எடுத்து, அதை போதைப்பொருள் விநியோக நிலையமாகப் பயன்படுத்தி வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் எவ்வாறு இவரிடம் வந்தது மற்றும் இதன் பின்னணியில் உள்ள பிரதான கடத்தல் குழு குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.