வீடு புகுந்த வாள் வெட்டுத் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு.!
கொழும்பு, வெல்லம்பிட்டி – சாதம்வத்தை பகுதியில் நேற்று வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், சாதம்வத்தை – ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குறித்த வீட்டின் உரிமையாளருடன் தற்காலிகமாகத் தங்கியிருந்தவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையின் பின்னணியில் போதைப்பொருள் தொடர்பான காரணங்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்துக்குரிய வீட்டின் உரிமையாளர் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே, போதைப்பொருள் குழுக்களுக்கிடையிலான பழிவாங்கல் காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்தவரை வாளால் வெட்டித் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன