கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்: பெருந்திரள் பக்தர்கள் வருகையால் நெருக்கடி நிலை.!
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.திருவிழா நேற்று மாலை ஆரம்பமாகி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் விரிவான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்களும், இலங்கையில் இருந்து 4,000 பக்தர்களும் என மொத்தம் 8,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், இந்தியாவில் இருந்து சுமார் 4,000 பேர் வருகை தந்ததுடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இலங்கையில் இருந்து எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமான பக்தர்கள் திரண்டதன் காரணமாக, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.அதிகப்படியான பக்தர் திரளினால் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.