மன்னார் மாவட்டச் செயலகத்தில் மீனவர் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!
மன்னார் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவச் சங்க பிரதிநிதிகள் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (27) மதியம் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிஜாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த கலந்துகொண்டார். அதேவேளை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழில்மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மன்னார் கடற்பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து மாறுபட்ட இயற்கை தன்மையைக் கொண்டதாக இருப்பதால், கடலடித் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிலைத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், பட்டிவலை மற்றும் சுருக்குவலை தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
தேசிய நீரியல் மற்றும் கடல் ஆய்வு நிறுவனம் (நாரா) மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.மீனவர்களுக்கான “பாடு” (மீன்பிடி எல்லை) நிர்ணயம் மற்றும்இலங்கை மீனவர்களுக்கிடையிலான நீண்டகால பிரச்சினை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பயன்படுத்தி, இராஜதந்திர ரீதியில் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண ஜனாதிபதி ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார். இந்திய மீனவர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இருநாட்டு மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் சுமுகமான முடிவை எட்ட அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே கருத்து வெளியிட்டபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இக்கூட்டம் மீனவர்களின் கருத்துகளை கேட்டறியும் நோக்கத்திலேயே நடைபெற்றதாகக் கூறினார். எனினும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.