உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
71 பார்வைகள்

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளின் தாக்கத்தால் 500 இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும் மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில் உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள் இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் ம.மலரவன், சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் பிரதிகளை இதன்போது முன்வைத்தார். இத்தகைய ஒளிமூலமான பெருமளவிலான கண் பாதிப்பு சம்பவம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த திருவிழாவுக்குப் பின்னர், பலர் கடுமையான கண் வலி, கண் சிவத்தல், அதிகக் கண்ணீர் வடிதல், ஒளியைத் தாங்க முடியாமை மற்றும் கண்களைத் திறக்க முடியாமை உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். சுமார் 500 பேர் கண் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அவர்களில் சுமார் 400 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் சுமார் 100 பேர் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சுமார் 386 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 114 பேர் 2 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை உடனடியாக அவசர மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொண்டு, கண் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் வெளிநோயாளர் பிரிவை தொடர்ச்சியாக இயக்கியதுடன், சுற்றுவட்டார மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை ஒருங்கிணைத்து சிகிச்சைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துவர முடிந்தமையே நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உதவியதாகவும் மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டினார்.

ஆரம்ப தொழில்நுட்ப மதிப்பீட்டின்படி, திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள் அதிக தீவிரம் கொண்ட மின்வெளியேற்ற விளக்குகள் வகையைச் சேர்ந்ததாகத் தோன்றியுள்ளதுடன், அவை மிகத் தீவிரமான ஒளியுடன் புற ஊதாக் கதிர்வீச்சையும் ஏற்படுத்தக்கூடியவை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான விளக்குகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக சர்வதேச ஒளி உயிரியல் பாதுகாப்புத் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் சுமார் ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர் ம.மலரவன் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் தீவிரமான பார்வை இழப்பை ஏற்படுத்தும் சிக்கல்கள் பதிவாகாத போதிலும், இவ்வகை அதிக தீவிர ஒளிக்கு நேரடியாக வெளிப்படுவது எதிர்காலத்தில் கடுமையான கண் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் சில மின்விளக்குகள் இணையம் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றில் சில கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாகவும் மருத்துவர் ம.மலரவன் சுட்டிக்காட்டினார்.

குறித்த மின்விளக்குகள் தொடர்ச்சியான பயன்பாட்டில் வெடிக்கும் அபாயமும் காணப்படுவதாக அவர் தெரிவித்ததுடன், இவ்வாறான அபாயங்களை கருத்திற்கொண்டு எதிர்கால ஒழுங்குமுறைகள் விரிவாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே காணப்படுகின்ற போதிலும், அவை நடைமுறையில் முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை என கண், காது, மூக்கு சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் இந்திரநாத் சுட்டிக்காட்டினார். ஒலி தொடர்பான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது ஒளிப் பயன்பாடு, வானவேடிக்கை மற்றும் யானைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நியமத்துணைவிதி ஒன்றை உருவாக்குவதற்கு கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், மாகாணசபை இல்லாத சூழலில் மாகாண உள்ளூராட்சி அமைச்சராக ஆளுநரின் ஒப்புதலுடன் இவ்வாறான நியமத்துணைவிதிகளை உருவாக்க முடியும் என்றும், அவற்றை பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் தமது சபைகளில் ஏற்றுக்கொள்வதன் மூலம் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் விளக்கமளித்தார்.

அதேநேரம், பொது இடங்களில் ஒலிப்பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டவரைவு ஒன்றை மத்திய சுற்றாடல் அதிகாரசபை தயாரித்து வருவதாக அதன் உதவிப் பணிப்பாளர் எல்.சி.ஆனந்த் தெரிவித்தார்.

இச்சட்ட ஏற்பாடுகளுடன் இணைந்து சமூக விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் வலுப்படுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் சுட்டிக்காட்டினார். ஆலய நிர்வாகங்கள், உபயகாரர்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஏனைய தரப்பினரிடையிலும் பாதுகாப்புப் பொறுப்புணர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளின் கீழ் பொதுத் தொல்லை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸாருடன் விரைவான கலந்துரையாடலை நடத்துவதற்கும் அமைச்சர் மற்றும் ஆளுநர் இணக்கம் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் எந்தவொரு திருவிழா அல்லது பொது நிகழ்விலும் பாதுகாப்பை விடக் கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என்றும், மக்களின் உயிர் மற்றும் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாடும் உரிய பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. மத மற்றும் பொது நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர், பொது மருத்துவ நிபுணர், கண்–காது–மூக்கு சத்திரசிகிச்சை நிபுணர், போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

26 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

47 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

54 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

62 0 0