செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் பிக்குகளை விமர்சிப்பதை பொதுபலசேனா அமைப்பு கண்டனம் .!
செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபலசேனா அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.கொழும்பு இராஜகிரியவில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பௌத்த பிக்குகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்காக முன்வருவது வரலாற்று ரீதியான கடமையாகும் என தெரிவித்தார்.
சோழர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஆக்கிரமிப்பாளர்களின் காலங்களிலும் சிங்கள பிக்குகளின் செல்வாக்கை சிதைக்க முடியவில்லை எனவும், நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவை எனவும் அவர் குறிப்பிட்டார்.தம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுவதாகவும், தமக்கு எதிராக அரசியல் வழக்குகள் தொடரப்பட்டு வெளிநாட்டு பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உண்மைத் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்புகள் தடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கவும், விகாரையைப் புனரமைக்கவும் நிதி தேவையுள்ளதாகவும், அதற்காக “ஜாதிக பின்கெட” என்ற பெயரில் புதிய வங்கி கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நீதிப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க விரும்புவோர்குறைந்தது 100 ரூபாவையேனும் அதில் வைப்புச் செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.