தரமற்ற நிலக்கரி ஒப்புதல் – ஊழல் இல்லை என அமைச்சர் லால் காந்த விளக்கம்.!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக அமைச்சர் கே.டி. லால் காந்த இன்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இருப்பினும், நிலக்கரி விநியோகத்துக்கான டெண்டர் நடைமுறையில் எந்தவித முறைகேடும் அல்லது ஊழலும் இடம்பெறவில்லை என அவர் உறுதியாக தெரிவித்தார்.
இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற வதந்திகள் எனக் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், தரமற்ற நிலக்கரி வழங்கப்பட்டமை உண்மைதான்; ஆனால் டெண்டர் வழங்கும் முறையில் எந்த விதமான மோசடியும் இடம்பெறவில்லை. தரக்குறைபாட்டால் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை அறவிடுவதற்கான முறையான விதிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்றும், அதன்படி இழப்பீடு வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த கால அரசுகளைப் போல் அமைச்சரவை தீர்மானங்களின் மூலம் தன்னிச்சையாக விநியோகஸ்தர்களைத் தேர்ந்தெடுக்காமல், தற்போது வெளிப்படையான விலைமனு கோரல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்காக கொண்டு வரப்பட்ட நிலக்கரி தரநிலைக்கு குறைவானதாக இருப்பதாக அண்மைக் காலத்தில் சர்ச்சை எழுந்திருந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், இயந்திரங்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.அமைச்சரின் இந்த விளக்கம், தொழில்நுட்ப குறைபாட்டை ஒப்புக்கொண்ட போதிலும், ஊழல் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.