ஒரே நாளில் இருவர் யானைகள் தாக்கி உயிரிழப்பு.!
இலங்கையின் பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வேறு காட்டு யானை தாக்குதல் சம்பவங்களில் இளம் விவசாயி ஒருவரும், முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்தந்த பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் வயல் வேலைகளை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 25 வயதுடைய இளம் விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெதிரிகிரிய தெற்கு பகுதியைச் சேர்ந்த அவரது மரணம் அப்பகுதி விவசாய சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேவேளை, அம்பாறை பானம பகுதியில் ஏரியில் நீராடச் சென்ற 71 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். நீராடி விட்டு வீடு திரும்பும் போது புதருக்குள் மறைந்திருந்த யானை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பானம தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.யானை–மனித மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.