“ஹசீனாவின் தலைமுடிக்கு சேதம் ஏற்பட்டால் கூட பங்களாதேஷ் அரசாங்கமே பொறுப்பு” : அமெரிக்கா எச்சரிக்கை!
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாய்நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு தொடர்பாகப் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கல் ரூபின் (Michael Rubin) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்குத் தாரிக் ரஹ்மானும் அவரது அரசாங்கமுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நியூயோர்க் நகரில் நடைபெற்ற ‘பங்களாதேஷின் எதிர்காலம்’ என்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இந்தக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“ஷேக் ஹசீனாவின் தலைமுடிக்குக் கூட எவ்வித சேதம் ஏற்பட்டாலும், அதற்கு அவர்களே முழுப் பொறுப்பாவார்கள்” என மைக்கல் ரூபின் குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கோ அல்லது அவருடன் வருபவர்களுக்கோ எந்தவித தீங்கு ஏற்பட்டாலும் அதன் முழுப் பொறுப்பையும் பங்களாதேஷ் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2002 முதல் 2004 வரை பென்டகனில் பணியாற்றிய மைக்கல் ரூபின், இந்தத் தகவலைப் பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்குமாறு அமெரிக்கத் தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் இராஜதந்திரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பங்களாதேஷின் தற்போதைய நிர்வாகத்துடன் எந்தவித சமரசத்திற்கும் செல்ல வேண்டாம் எனவும், ஷேக் ஹசீனாவுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து அவரது ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இந்தியாவைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவித்த சில நாட்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டில் பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற குறித்த கருத்தரங்கில் அவர் முதன்மை விருந்தினராகக் காணொளி ஊடாகக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


