ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும்!
ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம், மலையக சமூகங்களினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற சட்டத்தரணி க.சுகாஸ் அவர்களின் தமிழன் கனவு எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்கள் எழுதிய ‘தமிழன் கனவு’ என்ற புத்தகத்தின் அறிமுக விழா இன்று (20.09.2026 ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஆசிரியர் தருமலிங்கம் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியப் பொருளாளர் கணபதிப்பிள்ளை நீலாம்பரம் குருக்கள் மற்றும் இயேசு சபைத்துறவி யோசேப் மேரி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். மேலும், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரசாமி ரவிச்சந்திரன் முதன்மை விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற உரைகளின் போது, சிரேஷ்ட சட்டத்தரணி எப்.எக்ஸ்.எஸ். விஜயகுமார் அறிமுக உரையை வழங்க, பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான நவரத்தினம் சிவகுமார் விமர்சன உரையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சகோதர இனத்தின் பார்வையில் என்றும் கருப்பொருளில் சட்டத்தரணி பஹீர் மொஹைதீன் வஹாத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உபதலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான திருமதி. அமலராஜ் அமலநாயகி ‘நீதி தேடுவோர் பார்வை’ எனும் தலைப்பிலும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தியாகு முகிலன் ‘அடுத்த தலைமுறையின் பார்வை’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
விழாவின் நிறைவாக, நூலாசிரியரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு. கனகரத்தினம் சுகாஷ் ஏற்புரையாற்றியதைத் தொடர்ந்து, ஆசிரியர் திரு.கணபதிப்பிள்ளை குககுமாரராஜா நன்றியுரை கூறினார். சாந்தீஸ்வரன் சருஸ்திகா மற்றும் செல்வராசு பிரணீத்தா ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதன்மை விருந்தினர் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.குமாரசாமி ரவிச்சந்திரன் அவர்களால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழன் கனவு என்ற அந்த சொல்லாடலைப் பற்றி நாங்கள் சிந்தத்தால், கனவு காண்பதற்கு முதலிலே தமிழன் வாழவேண்டும். இந்தத் தீவிலே தமிழன் என்ற அடையாளத்தோடு வாழ்வதே இன்றைக்கு ஒரு கடும் போராட்டமாக இருக்கிறது. வெறுமனே தமிழன் என்று ஒரு தனிநபர் வாழ்வதல்ல. தமிழன் என்ற அந்த வார்த்தைக்கு ஆழமான கருத்து இருக்கிறது. அந்தத் தமிழன் என்ற வார்த்தையோடு எங்கள் கலாச்சாரம், மொழி, எங்களுடைய நிலப்பரப்பு அனைத்தும் சம்பந்தப்படுகின்றது. ஆகவே, அந்த கூட்டு வாழ்க்கையைப் பற்றி நாங்கள் சிந்திக்கின்ற போது எங்களுடைய எதிர்காலமே இன்றைக்கு ஒரு கேள்விக்குறியாக மாறிக்கொண்டு இருக்கின்றது.
அந்த எதிர்காலம் கேள்விக்குறியானது இன்றைக்கு நேற்று அல்ல கிட்டத்தட்ட 77 வருடங்களுக்கு முன்பதாகவே அது ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் என்னவென்று நாங்கள் தேடிப் பார்த்தால், அதை மிகச் சுருக்கமாக நாங்கள் இந்த நாட்டிலே இருக்கக்கூடிய ஆட்சிமுறையாக அடையாளப்படுத்தலாம்.
எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறன. ஆனால், அந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் உரிய மூலக்காரணமாக துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் ஆட்சிமுறைமையே இருக்கிறது.
இந்த நாட்டிலே வாழுகின்ற பெரும்பான்மை மக்கள், கிட்டத்தட்ட 75 வீதமான சிங்கள பௌத்த மக்கள் தங்களுடைய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி தங்களுடைய அடையாளத்தை மட்டும் பாதுகாத்து, தங்களுடைய அடையாளத்திற்கு மற்றவர்களுடைய அடையாளம் அச்சுறுத்தலாக பார்க்காமல், ஒரு பொது அடையாளத்தை நோக்கி 1948ம் ஆண்டிலிருந்தே சிங்கள மக்கள் பயணித்திருந்தார்களாக இருந்தால், தமிழர்கள் என்ற அந்த அடையாளத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் வந்திருக்காது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தீவிலே 75 வீதமான சனத்தொகையைக் கொண்ட சிங்கள பௌத்த மக்கள், மிஞ்சிய 25 வீதத்தைக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் இருப்பைக் கண்டு பயந்து, தங்களுடைய இருப்புக்கே அது ஒரு அச்சுறுத்தல் என்று கருதி, 1948ம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு, தங்களுக்கு கிடைத்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த 25 வீதமாகக் கொண்ட தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர்களுடைய அடையாளத்தை அழிப்பதற்குச் செயல்பட்டிருக்கின்றார்கள். அந்த ஆட்சி அதிகாரம் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆகவே, அந்த ஒற்றையாட்சிதான் இன்றைக்குத் தமிழன் இந்த கனவு காண்பதற்கு இருக்கக்கூடிய மிக மிக ஆபத்தானதும், ஒவ்வொரு நாளும் தங்களுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்துகின்றதுமான ஒரு விடயமாகவும் இருக்கின்றது.
ஆகவே, இந்த ஒற்றையாட்சி தொடர்பாக தமிழனுடைய இருப்பு, தமிழனுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறவன், அந்த ஒற்றையாட்சியினுடைய ஆபத்துகளை எங்களுடைய எதிர்காலச் சந்ததியினருக்கு தெளிவுபடுத்தாமல் இருந்திருந்தால், இன்று இந்த ‘தமிழன் கனவு’ என்ற புத்தகத்திற்கே என்னைப் பொறுத்தவரையிலே அர்த்தமில்லாமல் இருந்திருக்கும்.
இந்த நூலிலே பல விடயங்கள் பலர் பல கோணத்திலிருந்து பேசுவார்கள். அதனுடைய முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவார்கள். அவை அனைத்தையும் விட இந்த புத்தகத்தினுடைய ஒரு விடயத்தைத் தொட்டு இதனுடைய முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே இந்த ஒற்றையாட்சி சம்பந்தமாக திரு.சுகாஷ் அவர்கள் தன்னுடைய சட்ட அறிவை வைத்துக்கொண்டு இதிலே பதிவு செய்திருக்கின்ற மிகவும் ஆழமான கருத்துகள் தான் என்னைப் பொறுத்தவரையிலே மிகவும் பெறுமதியானவை.
இந்த ஒற்றையாட்சி தமிழினத்தினுடைய எதிர்காலத்தை மட்டும் கேள்விக்குட்படுத்தாது. அது எங்களுடைய முஸ்லிம் சமூகத்தினுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும். ஏன், எங்களுடைய மலையக தமிழ் மக்களுடைய இருப்பையும் கேள்விக்குட்படுத்தும்.
ஆனால், இன்றைக்கு மிக முக்கியமாக சிங்கள தேசம் அச்சுறுத்தலாக பார்க்கின்ற ஈழத்தமிழர்களுடைய இருப்பை முதல் கேள்விக்குட்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது. அதற்கு அடுத்தடுத்ததாக நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல எங்களுடைய முஸ்லிம்களுடைய, மலையகத் தமிழர்களுடைய இருப்பையும் நிச்சயமாகக் கேள்விக்குட்படுத்தும்.
நல்ல ஒரு சின்ன உதாரணம். இந்த போர்காலத்திலே தமிழர்களை ஓரம் கட்டுவதற்குச் சிங்களத் தரப்பு தமிழ் பேசும் மக்களைப் பிரித்தாள்கின்ற ஒரு முயற்சியை அவர்கள் தீவிரமாக முன்னெடுத்தார்கள். துரதிஷ்டவசமாக நாங்களும் ஏதோ ஒரு வகையிலே அதற்கு விட்டுவிட்டோம்.
ஆனால், போருக்குப் பிற்பாடு தமிழனை அழித்துவிட்டார்கள், தமிழனுடைய முதுகெலும்பை முறித்துவிட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கையிலே எங்களுடைய முஸ்லிம்களை எந்தவொரு இடத்திலும் எங்களுடைய முஸ்லிம் சகோதரர்கள் ஸ்ரீலங்கா அரசினுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தவில்லை.
ஆனால் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்தால் தங்களுடைய அந்த சிங்கள பௌத்த பேரினவாத கனவுக்கு அது அச்சுறுத்தலாக நிச்சயமாக இருக்கும் என்ற காரணத்தினாலே, தமிழனை அழித்துவிட்டு அடுத்ததாக முஸ்லிம் மீது அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆகவே, திரு. சுகாஷ் அவர்களுடைய ஒற்றையாட்சி சம்பந்தமாக அவர் பதிவு செய்திருக்கின்ற கருத்துகளை, இந்த நூல் ஒரு நீண்ட ஒரு நூல் இல்லை. சுருக்கமாக அவர் பல கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் இந்த நூலை முழுமையாக படிக்க முடியாவிட்டாலும், எங்களுக்கு அந்தளவுக்கு ஒதுக்குவதற்கு நேரம் இல்லாவிட்டாலும் படிக்கிறதுக்கு அந்த ஒற்றையாட்சி சம்பந்தமாக அவர் பதிவு செய்திருக்கின்ற கருத்துகளையாவது நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த மிகப்பொருத்தமான நேரத்திலே வெளியிட்டு இருக்கின்ற இந்த நூலுக்குத் தலைவராக, ஆசிரியராக இருக்கக்கூடிய வழக்கறிஞர் சுகாஷ் அவர்களுக்கு நன்றியைக் கூறி நான் விடைபெறுகின்றேன் என்றார்.












