சஹ்ரானை நான் கண்டதுமில்லை; பேசியதுமில்லை.!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சஹ்ரான் என்ற பயங்கரவாதியை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் மேலும் தெரிவித்ததாவது:
“ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் சமூகமோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை.”
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகமும் தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அரசியல்வாதியாக நானும் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கின்றேன்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்த என்னை, சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர் என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் ரிஷாட் பதியுதீன் கடுமையாக நிராகரித்தார்.
எனக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்ற முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பல தமிழ் ஊடகங்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சஹ்ரானை நான் கண்டதுமில்லை; அவருடன் பேசியதுமில்லை. எந்தவிதமான தொடர்பும் எனக்கு இல்லை.
எனவே, இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயங்கப் போவதில்லை” என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் நேர்மையான, சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அதற்காக முன்னெடுக்கப்படும் முறையான விசாரணைகளுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் பேசுவதற்கு தாம் முயற்சித்ததாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் பேசுவதற்கு நான் தொடர்புகொண்டேன். ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.