37ஆவது சரசவிய சினிமா விருது விழா.!
இலங்கைச் சினிமாவில் சிகரம் தொட்ட விசேட கலை விழாவாகிய 37ஆவது சரசவிய சினிமா விருது வழங்கும் விழா, செப்டம்பர் 09-ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘சரசவிய’ பத்திரிகை ஏற்பாடு செய்த இம்முறை விருது விழா, “இளைஞர் சினிமாவின் விடியல்” எனும் தலைப்பில் நடத்தப்பட்டதோடு, 2025ஆம் ஆண்டில் 13 புதிய இயக்குநர்கள் சிங்களச் சினிமாவில் தடம் பதித்தமையும் இவ்விழாவில் விசேடமாக அடையாளப்படுத்தப்பட்டது.
2025ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட சிங்களத் திரைப்படங்களைப் பாராட்டி, 34 போட்டிப் பிரிவுகளின் கீழ் 50க்கும் மேற்பட்ட விருதுகள் இங்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இதில் ஜனரஞ்சகமான திரைப்படமாக இலங்கோ ராஜ் இயக்கிய ‘நெலும் குளுண’ (தாமரைக் கோபுரம்) திரைப்படம் விருதை வென்றதுடன், திசர இம்புலான இயக்கிய ‘மோட தரிந்து’ திரைப்படம் அதிக வசூலை ஈட்டிய திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
இவ்விழாவில் உரையாற்றிய புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி,
1964ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சரசவிய விருது விழா கடந்து வந்த இந்தப் பயணம் குறித்து பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சினிமாவுக்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த சான்றோர்களைப் பாராட்டிக் கௌரவிப்பது மிகவும் போற்றத்தக்கது. பேராசிரியர் திஸ்ஸ ரணசிங்க அவர்களால் வடிவமைக்கப்பட்ட சரசவிய விருதானது, இலங்கையின் திரைப்பட விருதுகளில் தலைசிறந்த விருதாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டிலும் நடப்பாண்டிலும் மீண்டும் சினிமா வளம்பெறும் காலப்பகுதியாக மாறியுள்ளது. மீண்டும் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் வருகை தருவது ஒரு நல்ல அறிகுறியாகும். அதேபோன்று, இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்கார் விருது விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நம் நாட்டுத் திரைப்படம் ஒன்று தயாராக இருக்கிறது எனக் கூறினார்.
இந்நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, தொழிற்கல்வி அமைச்சர் நலின் ஹேவகே, சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்ஸக விஜேமுனி, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான உள்ளிட்ட லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்கள், மூத்த மற்றும் இளைய கலைஞர்கள், திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.










